நெடுஞ்சாலைகளில் ஏன் அரளி செடிகள் வளர்க்கப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் அரளி செடிகள் வளர்க்கப்பட்டு வருவதை, நீங்கள் வாகனத்தில் பயணிக்கும்போது கவனித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக செவ்வரளி செடிகள்தான் மிகவும் அதிகமாக இருக்கும். இது அரளி குடும்பத்தை சேர்ந்த செடிகளில் ஒன்றாகும். அரளி செடிகளை பொறுத்தவரையில், செவ்வரளி மற்றும் வெள்ளரளி உள்ளிட்ட வகைகள் இருக்கின்றன.
இதில் செவ்வரளி செடிதான், நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் மிக அதிகளவில் வளர்க்கப்படுகிறது. பொதுவாக அரளி செடிகள் விஷத்தன்மை கொண்டவை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். அப்படி இருக்கும்போது, நெடுஞ்சாலைகளில் ஏன் செவ்வரளி செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
நெடுஞ்சாலைகளின் வழியாக தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. இதில், கார், லாரி மற்றும் பஸ் என பலதரப்பட்ட வாகனங்கள் அடங்கும்.
இந்த வாகனங்கள் அனைத்தும் அதிகப்படியான புகையை கக்குகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மிக கடுமையாக மாசடைகிறது. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையில் கார்பன் துகள்கள் அதிகளவில் இருப்பதுதான் இதற்கு காரணம். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு சுவாச பிரச்னைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்னையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே, நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் செவ்வரளி செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. செவ்வரளி செடியின் இலைகள் மற்றும் மலர்களுக்கு விசேஷ சக்தி ஒன்று உள்ளது. அதாவது வாகன புகையால் காற்றில் கலந்துள்ள கார்பன் துகள்களை நீக்கும் தன்மை அவற்றுக்கு உண்டு.
இதன் மூலம் அசுத்தமான காற்றை, செவ்வரளி செடியின் இலைகள் மற்றும் மலர்கள், தூய்மையான காற்றாக மாற்ற விடும். எனவே நீங்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு செவ்வரளி செடிகள் உதவி செய்கின்றன. செவ்வரளி செடிகள் காற்று மாசுபாட்டை குறைப்பதுடன், ஒலி மாசுபாட்டையும் குறைக்கின்றன.
ஆம், சத்தத்தை குறைக்கும் தன்மை இவற்றுக்கு உண்டு. நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் தொடர்ச்சியான பயணத்தால், ஒலி மாசுபாடு பிரச்னையும் ஏற்படுகிறது. ஆனால் இந்த பிரச்னைக்கும் செவ்வரளி செடிகள் நல்ல தீர்வாக இருக்கும். அத்துடன் நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை தடுப்பதிலும் கூட செவ்வரளி செடிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
அதாவது எதிர்ப்புறம் உள்ள சாலையில் வரும் வாகனங்களின் ஹெட்லைட்களின் வெளிச்சம், அவர்களுக்கு எதிர்திசையில் வரும் வாகனங்களின் டிரைவர்கள் மீது படாமல் தடுக்கும் பணியில் செவ்வரளி செடிகள் ஈடுபடுகின்றன. செவ்வரளி செடிகளின் இலைகள் மிகவும் அடர்த்தி மிக்கவையாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
எனவே நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை தடுப்பதிலும் செவ்வரளி செடிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. செவ்வரளி செடிகளுக்கு, வறட்சியை தாங்கும் திறனும் இருக்கிறது. அத்துடன் இவை அனைத்து பருவ நிலைகளிலும் வளரக்கூடியவை என்பதும் கூடுதல் சிறப்பு. இதுபோன்ற காரணங்களால், செவ்வரளி செடிகளுக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
மேலும் செவ்வரளி செடியின் இலைகளை, எந்த விலங்குகளும் உண்ணாது. எனவே விலங்குகளிடம் இருந்து நாம் செவ்வரளி செடிகளை காக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதுபோன்ற காரணங்களால்தான் நெடுஞ்சாலைகளில் செவ்வரளி செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. அத்துடன் இவை நெடுஞ்சாலைகளுக்கு கூடுதல் அழகை சேர்த்து, மனதை இதமாக்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment